2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் தனித்துவமான பாதையில் பயணித்து வரும் சீமான், தமிழ் தேசியத்தை முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். திராவிடக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டையும் சமமான தூரத்தில் வைத்து விமர்சித்து வரும் அவர், அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகத் தன்னை முன்னிறுத்தித் தொடர்ந்து தேர்தல்களைச் சந்தித்து வருகிறார்.
தற்போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், இதுவரை அக்கட்சியால் ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கூடப் பெற முடியவில்லை. இருப்பினும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் ‘தனித்துப் போட்டி’ என்ற உறுதியான முடிவில் சீமான் தொடர்ந்து பயணித்து வருகிறார். 2026 தேர்தலிலும் இதே நிலைப்பாட்டைத் தொடர அவர் முடிவு செய்துள்ளார்.
முந்தைய தேர்தல்களில் பல்வேறு தொகுதிகளில் களம் கண்ட சீமான், இந்த முறை தனது சொந்த மண்ணான காரைக்குடியில் போட்டியிட விரும்புவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊர் மக்களின் ஆதரவோடு இந்த முறை சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற இலக்கோடு சீமான் காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
