“ராகுலை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன்” வைரல் வீடியோவால் நடுங்கிய அரசியல் களம்… பாஜக ஒரு ‘கோட்சே தொழிற்சாலை’.. கொந்தளித்த காங்கிரஸ்…!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை அவர்களது வீட்டிற்கே புகுந்து சுட்டுக் கொல்வேன் என வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்ணி சேனா அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்பவர், சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகர போலீசார் உடனடியாகச் செயல்பட்டு அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு ‘கோட்சே தொழிற்சாலை’ என்றும், ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வன்முறையைத் தூண்டும் இத்தகைய செயல்கள் பாஜகவின் பின்னணியில் நடப்பதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

   

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படும் சூழலில், மத்திய அரசு ஏன் மௌனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் கேள்வி எழுப்பியுள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லையா என்றும், ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.