“தேமுதிக IN.. காங்கிரஸுக்கு கல்தா?”… ஸ்டாலின் கையில் புதிய லிஸ்ட்…. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்…?

By Nanthini on மாசி 19, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த உத்தேசப் பட்டியல் மற்றும் அரசியல் நகர்வுகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நீண்டகாலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை அமைப்பதற்கும் திமுக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அரசியல் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாக, தேமுதிக கட்சி திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் சுமார் 7 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவின் வருகை கூட்டணியின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என திமுக நம்புகிறது. அதே வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

   

வெளியாகியுள்ள உத்தேசப் பட்டியலின்படி, திமுக இந்த முறை அதிகப்படியாக 167 முதல் 170 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான விசிகவிற்கு 7 இடங்களும், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்களும், முஸ்லிம் லீக், மமக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், எஸ்டிபிஐ கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

காங்கிரஸ் கட்சி கூட்டணியில் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வரலாம். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் காங்கிரஸ் வெளியேறினால், அந்தத் தொகுதிகளைத் தன்வசம் வைத்துக்கொள்ளவோ அல்லது மற்ற சிறிய கட்சிகளுக்குப் பிரித்து வழங்கவோ திமுக முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் தற்போது இந்த உத்தேசப் பட்டியல் இருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2026 தேர்தல் களத்தில் ஒரு புதிய கூட்டணிக் கணக்கை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.