ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் அரசு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் வகையிலான மிகக் கொடூரமான சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின்படி, கணவன் தனது மனைவியை அடிப்பதோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதோ குற்றம் கிடையாது என்றும், அந்த அடிதடியினால் எலும்பு முறிவு ஏற்பட்டால் மட்டுமே அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை முற்றிலுமாக நசுக்கும் இந்த அறிவிப்பு, ஆப்கானிஸ்தான் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏற்கனவே கல்வி கற்கும் உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை எனப் பெண்களின் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வீட்டு வன்முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது பெண்களை அடிமைகளாக நடத்தும் போக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த சட்டத்தின் மூலம் வன்முறையாளர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலக நாடுகள் தலிபான் அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
