மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், புகழ்பெற்ற இதய நோய் நிபுணர் ஒருவர் தனது தோழியுடன் காரில் சென்றபோது, அவரது மனைவியால் நடுரோட்டில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவரின் மனைவியும் ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே தனது கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி, அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். புதன்கிழமை அன்று, அந்த மருத்துவர் தனது சொகுசு காரில் மற்றொரு பெண்ணுடன் செல்வதைக் கண்ட மனைவி, சினிமா பாணியில் துரத்திச் சென்று காரை மறித்துள்ளார்.
காரை நிறுத்தியவுடன் ஆத்திரமடைந்த மனைவி, உள்ளே தனது கணவருடன் இருந்த பெண்ணை வெளியே இழுத்துப் போட்டு தாக்கத் தொடங்கினார். நடுரோட்டில் அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அவர் நடத்திய இந்த ‘ஹை வோல்டேஜ்’ நாடகம் அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருத்துவர் தனது மனைவியிடமிருந்து தோழியைக் காப்பாற்ற முயன்றும் பலனில்லை. இந்த மொத்தச் சம்பவத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நகரின் மதிப்புமிக்க மருத்துவரின் இந்த அந்தரங்க விவகாரம் பொதுவெளியில் அம்பலமானது மருத்துவ வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
