அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் செயல்பாடுகள், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஆசியானெட் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் கொங்கு மண்டலத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், சுமார் 40 தொகுதிகளைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாகத் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் அந்தப் பகுதிகளில் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகள் தொடர்பாக அவர் காட்டும் மெத்தனப் போக்கு கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2021 தேர்தலிலேயே இப்பகுதியில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மண்டல நிர்வாகிகள் தரப்பில், எடப்பாடி பழனிசாமி இப்பகுதியைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்குவதற்குப் பின்னணியில் ஒரு அரசியல் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, சென்னை மண்டலத்தில் உள்ள முக்கியத் தொகுதிகளை பாஜக கோருவதாகவும், அதற்கு எடப்பாடி தரப்பு பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் இணங்கிப் போவதாகவும் செய்திகள் பரவுகின்றன. இது தங்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என சென்னை மண்டல அதிமுக நிர்வாகிகள் கொதிப்படைந்துள்ளனர்.
தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி பெயரளவில் எச்சரித்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “கொங்கு மண்டலம் மட்டும் இனிக்குதா? சென்னை மண்டலம் கசக்குதா?” என்ற ரீதியில் எழும் இந்த அதிருப்திக் குரல்கள், வரும் தேர்தல்களில் அதிமுகவின் ஒற்றுமையைப் பாதிக்குமோ என்ற அச்சத்தை அக்கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.
