“டார்ச் லைட் வெளிச்சத்தில் சூரியன்?”…. காங்கிரசை அதிர வைக்க கமல் கையில் எடுத்த அஸ்திரம்…. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்….!

By Nanthini on மாசி 18, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடர்பாக நிலவி வரும் இழுபறியைத் தீர்க்க, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் “தூதுவராக” களம் இறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசன், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மேலிடத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவைப் பயன்படுத்தி இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில் அமையும் அடுத்த ஆட்சியில் தங்களுக்கு அதிகாரப் பகிர்வு (Cabinet Berths) வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி பிடிவாதம் காட்டி வருகிறது. ஆனால், “தமிழக அரசியலில் கூட்டாட்சி முறைக்கு இடமில்லை” என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை விழுந்துள்ள நிலையில், ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தின் மூலம் காங்கிரஸைச் சமாதானப்படுத்த திமுக முயல்கிறது.

   

இந்த சமரச முயற்சியின் ஒரு பகுதியாக, கமல்ஹாசன் டெல்லி சென்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் எதிர்பார்க்கும் 40 இடங்களுக்குப் பதிலாக 30 முதல் 32 இடங்களுக்குள் அவர்களைச் சம்மதிக்க வைப்பதும், ஆட்சிப் பங்கு கோரிக்கையைக் கைவிட்டு பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதுமே கமலை அனுப்பியதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

   

கமல்ஹாசன் ஏற்கனவே தனக்கென அதிக இடங்களைக் கோராமல் திமுகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதால், அவரை முன்வைத்து காங்கிரஸையும் “விட்டுக்கொடுத்து” போகச் சொல்லும் வியூகத்தை திமுக கையில் எடுத்துள்ளது. பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டுக் குழுக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ள நிலையில், அதற்குள் “உலகநாயகனின்” இந்த அரசியல் தூது பலன் அளிக்குமா அல்லது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.