தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 58 வயது முதியவர் ஒருவருக்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இணைந்து விமரிசையாக காது குத்து விழா நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலமந்தை தெருவைச் சேர்ந்த தங்கையா என்பவருக்கு 58 வயதாகும் நிலையில், அவருக்கு இதுவரை காது குத்தும் சடங்கு செய்யப்படவில்லை என்ற குறையைத் தீர்க்க அவரது மனைவி முருகேஸ்வரி இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தங்கையா சிறு வயதாக இருக்கும்போதே அவரது தாய் மறைந்துவிட்டதால், அவருக்கு உரிய காலத்தில் காது குத்து விழா நடத்த முடியாமல் போயுள்ளது. இந்தத் தகவல் முருகேஸ்வரிக்குத் தெரிந்ததும், தனது கணவருக்கு முறைப்படி குலதெய்வக் கோயிலில் வைத்து இந்தச் சடங்கைச் செய்ய வேண்டும் என்று அவர் நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்தார். பல தடைகளைத் தாண்டி, மகா சிவராத்திரி நன்னாளில் இந்த ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார்.
இந்த விழாவிற்காகத் தங்கையாவின் தாய்மாமன் உறவினர்கள் தாரை தப்பட்டை முழங்க, சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து அசத்தினர். பேரன், பேத்திகள் எடுத்த வயதில், தங்கையாவுக்கு மொட்டை அடித்து, காது குத்தி தங்கக் கடுக்கன் அணிவிக்கப்பட்ட காட்சி அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு சிறுவனுக்கு நடப்பது போன்றே அனைத்துச் சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக நடத்தப்பட்டன.
வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த விழாவிற்குப் பின் பேசிய முருகேஸ்வரி, “தன் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமை நிறைவேறியதில் மனநிறைவு அடைவதாக” நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நவீன காலத்தில் உறவுகளின் மதிப்பும், பாரம்பரியச் சடங்குகளின் முக்கியத்துவமும் குறைந்து வரும் வேளையில், கணவரின் ஆசையை மதித்து மனைவி நடத்திய இந்த “சர்ப்ரைஸ்” காது குத்து விழா தேனி மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான பேசுபொருளாக மாறியுள்ளது.
