கோவை குனியமுத்தூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக எஸ்சி சிறப்பு உட்கூறு நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த நிதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சிறப்பு நிதிகளை கவர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், தேர்தல் ஆணையத்தை அணுகி இது குறித்து முறையிடப் போவதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் தயங்கப்போவதில்லை என்றும் எச்சரித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் புதிய தமிழகம் கட்சி ‘கூட்டணி ஆட்சி’ என்ற இலக்கில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த கிருஷ்ணசாமி, இதற்கான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த ஒரு வாரத்தில் கோவையில் வைத்து வெளியிடுவேன் என்றார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்குத் தகிக்கும் நண்பகல் வேளையில் அனுமதி வழங்கியதை விமர்சித்த அவர், வெயில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் ஒரு மருத்துவராகத் தான் அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
