திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அண்மையில் நடந்த ஒரு குழந்தை கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூரைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்குப் பிறந்த மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மீனாட்சி என்ற பெண் நைசாகப் பேசி கடத்திச் சென்றார். குழந்தைக்குத் தடுப்பூசி போட்டு வருவதாகக் கூறி வாங்கிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஏழு மணி நேரத்திற்குள் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே குழந்தையை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மீனாட்சியைக் கைது செய்தனர்.
இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள காரணங்கள் அப்படியே ‘எஜமான்’ படப் பாணியில் அமைந்திருப்பது போலீசாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள மீனாட்சி, கணவரைப் பிரிந்து சுரேஷ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். சுரேஷ் மூலம் கர்ப்பமடைந்த மீனாட்சிக்கு, மூன்று மாதங்களிலேயே எதிர்பாராத விதமாகக் கரு கலைந்துள்ளது. ஆனால், இந்த உண்மையைச் சொன்னால் கணவர் குடும்பத்தினர் தன்னைப் பிரிந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், தான் தொடர்ந்து கர்ப்பமாக இருப்பதாகவே நாடகமாடியுள்ளார்.
தன் பொய்யை மெய்ப்பிக்க, கர்ப்பிணிப் பெண் போலவே நடித்து வந்த மீனாட்சிக்கு உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்துள்ளது. வளைகாப்பு முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், எப்போது குழந்தை பிறக்கும் என்று குடும்பத்தினர் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி, எங்காவது ஒரு குழந்தையைத் திருடி வந்து தன்னுடைய குழந்தை எனச் சொல்லிவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து, அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுகன்யாவிடம் நைசாகப் பழகி இந்தக் கடத்தலை அரங்கேற்றியுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தை பத்திரமாகத் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீனாட்சியின் இந்த விசித்திரமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொய்யை மறைக்கத் தொடர்ச்சியாகப் பொய்கள் சொல்லி, இறுதியில் ஒரு குழந்தையையே கடத்தும் அளவிற்குச் சென்ற அவரது செயல் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. தற்போது போலீசார் மீனாட்சியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மருத்துவமனை போன்ற பொது இடங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் குழந்தைகளைக் கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
