திருநின்றவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், பெண் ஒருவர் திடீரென தனது தாலியைக் கழற்றி எறிந்து கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேடைக்கு வந்த அந்தப் பெண் அங்கிருந்த மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தன்னை ஒரு ஐடி ஊழியர் மற்றும் கோல்டு மெடலிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், தனக்கு நீதி வேண்டும் என்று மேடையில் முழக்கமிட்டார். தனது குடும்பத்தினருடனும் கணவருடனும் வாழப் பிடிக்கவில்லை என்றும், கொரோனா காலத்தில் கடுமையாக உழைத்த தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தான் அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்தத் திடீர்ச் செயலால் பேச்சை பாதியில் நிறுத்திய ராஜ்மோகன் மற்றும் மேடையில் இருந்த நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக அங்கிருந்த பெண் காவலர்கள் அந்தப் பெண்ணை அணைத்துச் சென்று சமாதானப்படுத்த முயன்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் மன உளைச்சலில் இருந்ததாகவும், குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ராஜ்மோகன் தனது உரையைத் தொடர்ந்தார். அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் தனது தாலியைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
