பாத்ரூம் ஜன்னல் ஓரம் ஒரு செல்போன்.. கதிகலங்கிப்போன நர்சிங் ஹோம் பெண்கள்… சென்னையை நடுங்க வைத்த சம்பவம்….!

By Nanthini on மாசி 16, 2026

Spread the love

சென்னையின் வடக்குப்பகுதியான கொளத்தூர், எஸ்.ஆர்.பி காலனியில் உள்ள வாடகை வீட்டில் தனியார் நர்சிங் ஹோமில் பணிபுரியும் 11 செவிலியர்கள் தங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, அங்கு பணிபுரியும் 46 வயது பெண் ஒருவர் செவிலியர்களைப் பார்க்கச் சென்றபோது, அக்கம் பக்கத்தினர் ஒரு திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர். யாரோ ஒரு நபர் அடிக்கடி அந்த வீட்டின் குளியலறை ஜன்னல் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் செல்போனுடன் நடமாடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மற்ற செவிலியர்களுடன் இணைந்து ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக, குளியலறை ஜன்னல் வழியாக ஒரு நபர் தனது செல்போனைப் பயன்படுத்தி செவிலியர்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுப்பதைக் கவனித்தனர். உடனடியாக அந்த நபரை கையும் களவுமாகப் பிடிக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீடியோ எடுத்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (37) என்பது தெரியவந்தது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வரும் இவர், நீண்ட நாட்களாக இது போன்ற அருவருப்பான செயலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

   

இதனைத் தொடர்ந்து, சத்யராஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். நகர்ப்புறங்களில் பெண்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பாதுகாப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.