அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக விஜய் முன்னிலையில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மனோகரன் நேற்று முறைப்படி தவெகவில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் அவருக்கு சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இந்த கட்சித் தாவல்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவெக மிகத் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் உள்ள முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செல்வாக்கு மிக்க புள்ளிகளை குறிவைத்து விஜய் தனது பக்கம் இழுத்து வருகிறார். வரும் நாட்களில் மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் மாற்றங்கள் அதிமுகவின் அடிமட்டக் கட்டமைப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
