2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) தனது தேர்தல் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்வது என்றும், இந்த முறை 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் திமுக தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மமக, இந்த முறை கூடுதல் பலத்துடன் 5 இடங்களைக் கோருவதோடு, அவற்றை உதயசூரியன் சின்னத்திற்குப் பதிலாகத் தங்களது தனிச் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்திப் பெறுவதன் மூலம் கூட்டணியில் தங்களது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும், கட்சியின் அடையாளத்தை நிலைநாட்டவும் ஜவாஹிருல்லா தலைமையிலான மமக தற்போது திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
