“தோத்த 40 தொகுதியை கொடுங்க”… திமுகவின் முகத்திரையை கிழித்த மாணிக்கம் தாகூர்…. தமிழக அரசியலில் வெடித்த ‘பவர் ஷேரிங்’ யுத்தம்….!

By Nanthini on மாசி 15, 2026

Spread the love

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி விவகாரம் தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தற்போது முன்வைத்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, திமுக போட்டியிட்டு தோல்வியடைந்த தொகுதிகளை மையமாக வைத்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், வரும் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், கூட்டணி ஆட்சிக்குத் தமிழகத்தில் இடமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மாணிக்கம் தாகூர், “2021 தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்ட திமுக 133 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள 40 தொகுதிகளில் நீங்கள் தோல்வி அடைந்தீர்கள்; அந்தத் தொகுதிகளைத்தான் நாங்கள் கேட்கிறோம்” எனக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

   

மேலும், ஆட்சியில் பங்கு என்பது தங்களது உரிமை என்றும், அதிகாரப் பகிர்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கை எழுப்பப்படுவது கவனிக்கத்தக்கது. கடந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18-ல் வென்ற காங்கிரஸ், இந்த முறை 41 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

   

மாணிக்கம் தாகூரின் இந்த அதிரடி விமர்சனம் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே, இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் இந்த வார்த்தைப் போர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறவில் விரிசலை ஏற்படுத்துமா அல்லது இது வழக்கமான அரசியல் அழுத்தம்தானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.