தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி கடும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அவரது அணியின் முக்கிய மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
ஓபிஎஸ் அணியில் இருந்த முக்கியத் தூண்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தற்போது மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் வெளியேறுவது ஓபிஎஸ் அணிக்குத் தொடர் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவத் தொடங்கியுள்ளனர்.
இந்த இணைப்பின் போது, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் மற்றும் விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இது ஓபிஎஸ் அணியின் அடித்தளத்தை பலவீனப்படுத்துவதுடன், அந்த மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ‘தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ எனத் தொடங்கி, பின்னர் அதை கழகமாக மாற்றிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களைத் தக்கவைக்க முடியாமல் திணறி வருகிறார். ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை வலுப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் ஓபிஎஸ் அணியினர் அடுத்தடுத்து திமுக மற்றும் பிற கட்சிகளுக்குச் செல்வது ஓபிஎஸ்-ஸின் அரசியல் பயணத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
