தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த 35 வயதான முருகேஸ்வரி, தனது வாழ்வாதாரத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க நீதி கேட்டுப் போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் கணவரால் கைவிடப்பட்டு, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முருகேஸ்வரிக்கு, கார்த்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. முருகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்திருந்தும், கார்த்திக் அவரைத் திருமணம் செய்து கொண்டு பெரியகுளத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
நல்லபடியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கார்த்திக்கின் குடும்பத்தினர் தலையிட்டபோது சிக்கல்கள் முளைத்துள்ளன. கார்த்திக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டு, முருகேஸ்வரியை விட்டுப் பிரியுமாறு கார்த்திக்கை வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, முருகேஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி சமரசம் செய்துகொண்ட கார்த்திக்கின் குடும்பத்தினர், அதே சமயம் சொத்துகளில் உரிமை கோரக்கூடாது என முருகேஸ்வரியிடம் கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் கணவருடன் வாழத் தொடங்கிய முருகேஸ்வரிக்குத் துன்பங்களே மிஞ்சின. மாமியார் மற்றும் குடும்பத்தினரின் தூண்டுதலால் கார்த்திக் தினமும் முருகேஸ்வரியை சித்திரவதை செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு முருகேஸ்வரி வீடு திரும்பியபோது, கணவர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவானது தெரியவந்தது. மேலும், அவருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கப் போவதாகக் கூறி முருகேஸ்வரிக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது முருகேஸ்வரி 8 மாதக் கர்ப்பிணியாக உள்ள நிலையில், உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமலும், தனது இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க வழியில்லாமலும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார். சட்ட ரீதியான பாதுகாப்பு கோரியும், தனது கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும், தனக்குக் கொடுமை இழைத்த மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
