தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருகிறது. நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து, அவருக்காகத் திரையிலும் திரைக்கு வெளியேயும் உழைத்த ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே நற்பெயர் பெற்ற மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்த புதிய நபர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, பெலிக்ஸ் மற்றும் சி.டி. நிர்மல்குமார் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே பழைய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் தொடக்கக் காலத்திலிருந்து அவருக்காக உழைத்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர், தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதை அறிந்து மிகுந்த கவலையில் உள்ளனர். “காலம் காலமாக உழைத்தவர்களுக்கு வேட்டு, நேற்று வந்தவர்களுக்குச் சீட்டு” என்ற மனநிலை கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள பழைய நிர்வாகிகள் இந்த முடிவால் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள விஜய், தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய ரத்தம் பாய்ச்சுவதன் மூலம் கட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல அவர் விரும்பினாலும், விசுவாசமான நிர்வாகிகளின் அதிருப்தியை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதே தற்போதைய அரசியல் சூழலில் உற்று நோக்கப்படும் விஷயமாக உள்ளது.
