அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் செல்வாக்கைச் சிதைக்க, திமுக தலைமை ‘மூன்று டைம் பாம்கள்’ என்ற பெயரில் ஒரு மெகா வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி, அதிமுக கூட்டணியில் உள்ள வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலம், தேர்தல் களத்தில் திமுக எளிதான வெற்றியைப் பெற முடியும் என்று கணக்கு போடப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் மையக்கருவாக உள்ளது.
இந்த வியூகத்தில் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ராமதாஸ் ஆகிய மூவரும் முக்கியக் கருவிகளாகப் பார்க்கப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்தால் மட்டுமே கட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று சசிகலா மற்றும் ஓபிஎஸ் கருதுகின்றனர். அதேபோல், பாமகவில் அன்புமணி ராமதாஸின் பிடியைத் தளர்த்தி கட்சியைத் தன் வசப்படுத்த ராமதாஸ் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த மூவரின் அதிருப்தியையும் எடப்பாடிக்கு எதிரான கோபத்தையும் திமுக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்புக்குத் தேவையான நிதி மற்றும் இதர வசதிகளைப் பின்னணியிலிருந்து திமுகவின் முக்கியப் புள்ளிகள் செய்து தர உறுதி அளித்துள்ளதாகப் பேசப்படுகிறது. சுமார் 60 முதல் 80 தொகுதிகளில் இவர்கள் தனித்து அல்லது சிறு அமைப்புகளுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம், அதிமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகளைப் பிரிக்க முடியும். இதனால் திமுகவுக்குச் சில தொகுதிகள் இழப்பு ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக 80 தொகுதிகள் வரை கூடுதல் லாபம் கிடைக்கும் என்பது அறிவாலயத்தின் கணக்காக உள்ளது.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைச் சசிகலா பிரிப்பதன் மூலமும், வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகளை ராமதாஸ் ஈர்ப்பதன் மூலமும் அதிமுக கூட்டணி நிலைகுலையக்கூடும். துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் இவர்கள், வெற்றி பெறாவிட்டாலும் எடப்பாடியின் தோல்வியை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழக அரசியலில் தங்களது தோல்வியின் மூலம் திமுகவின் வெற்றியைச் சாதிக்கும் இந்த விசித்திரமான காய் நகர்த்தல் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
