2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்துள்ள முக்கிய இலக்காகும் (“டார்கெட்”). செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வென்றது போல், வரும் தேர்தலிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த இலக்கை அடைய, அரசின் திட்டங்களால் பயனடைந்த 1.86 கோடிக்கும் அதிகமான மக்களைத் தொண்டர்கள் நேரடியாகச் சந்தித்து உரையாட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவிற்கு வாக்களிக்காத குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களின் நம்பிக்கையைப் பெறவும், “234 தொகுதிகளிலும் ஸ்டாலினே வேட்பாளர்” என்ற மனநிலையுடன் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவும் அவர் கட்டளையிட்டுள்ளார்.
