தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிக் கணக்குகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தன்னை அ.தி.மு.க-வில் மீண்டும் இணைக்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், தன்னைச் சந்தித்த நிர்வாகிகளை நீக்கிய டி.டி.வி தினகரனுக்கும் பதிலடி கொடுக்க சசிகலா புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாகத் தெரிகிறது. தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியைப் பிரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். நேரடியாக அரசியலில் குதிக்காமல், தனது சகோதரர் திவாகரனின் ‘அண்ணா திராவிடர் கழகம்’ கட்சி மூலமாக இந்தக் கூட்டணியில் அவர் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், நடிகர் விஜய்யைச் சந்தித்துப் பேசியதாகவும், அதற்கு விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தென் தமிழகத்தில் சுமார் 25 தொகுதிகளைக் குறிவைத்து இந்தக் கூட்டணி செயல்பட உள்ளது. அ.தி.மு.க மற்றும் அமமுக ஆகிய கட்சிகளின் வெற்றியைப் பாதிக்கும் வகையில் வாக்குகளைப் பிரிப்பதே சசிகலாவின் பிரதான இலக்காக இருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான கூட்டணியும் தங்களைக் கைவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியைப் பழிவாங்கும் நோக்கில், தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, அ.தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ‘விஜய்-சசிகலா-ஓபிஎஸ்’ கூட்டணி அமையும் பட்சத்தில், அது தென் மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-வின் பாரம்பரிய வாக்குகள் இக்கூட்டணிக்குச் செல்ல வாய்ப்புள்ளதால், இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். பின்னணியில் இருந்து கொண்டு சசிகலா இயக்கும் இந்த அரசியல் காய்நகர்த்தல்கள், வரும் தேர்தலில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
