விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருந்த பாரத மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் செந்தில்குமார், தற்போது அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தனது பழைய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்தாண்டு தனது பாரத மக்கள் முன்னேற்றக் கழகத்தை இணைத்திருந்த செந்தில்குமார், தற்போது தவெகவின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்காகப் பணியாற்றும் நோக்கத்தில்தான் தவெகவில் இணைந்தோம். ஆனால், அங்கு நிலவும் சூழல் மற்றும் செயல்பாடுகள் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், தவெக உடனான உறவைத் துண்டித்துக்கொண்டு மீண்டும் பாரத மக்கள் முன்னேற்றக் கழகமாகவே சுயேச்சையாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
“தவெகவில் இருந்து விலகுகிறேன்” மீண்டும் பழைய ரூட்டுக்கே போன முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் விஜய்..!!
தேர்தல் நெருங்கும் வேளையில், தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், செந்தில்குமாரின் இந்த விலகல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூட்டணியை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தவெகவுக்கு, ஏற்கனவே இணைந்த ஒரு கட்சி வெளியேறுவது தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த விலகல் குறித்து சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களுக்கும், மாற்று அரசியல் பேசுவோருக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு தரப்பினர் இது தவெகவின் உட்கட்சி ஜனநாயகத்தில் உள்ள குறையைக் காட்டுவதாக விமர்சிக்கின்றனர். அதேசமயம், மற்றுமொரு தரப்பினர் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாகவே இந்த விலகல் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
