தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சித் தாவல் படலங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களை வரவேற்ற அமைச்சர், எதிர்வரும் தேர்தல் பணிகளில் தொய்வின்றி ஈடுபட்டு திமுகவின் வெற்றியை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கட்சித் தாவல் நிகழ்வு சேலம் மாவட்ட அரசியலில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியில் திமுக தனது பிடியை வலுப்படுத்தி வருவது, தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
