இந்திய ரயில்வேயின் புதிய விதிமுறைகளின்படி, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் (Reserved Coaches) பயணம் செய்யும் போது, ஒரு டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது அசல் அடையாளச் சான்றை (Original ID Proof) கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நகல்கள் அல்லது ஜெராக்ஸ் பிரதிகளுக்குப் பதில், அசல் சான்றிதழை ரயில்வே ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும். ஒருவேளை டிக்கெட்டில் உள்ள எவரிடமும் அடையாளச் சான்று இல்லையென்றால், அந்த டிக்கெட்டில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் டிக்கெட் இல்லாதவர்களாகக் கருதப்பட்டு, விதிகளின்படி அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு ஒதுக்கீட்டின் (Special Quota) கீழ் சலுகை பெற்று பயணிப்போர், அதற்கான தகுந்த துணைச் சான்றிதழ்களைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறை ரயில்களில் முறையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வதை உறுதி செய்யுமாறு இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
