தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விருப்ப மனு விநியோகம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை பனையூர் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், அங்கு தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கட்சியினரின் சிரமத்தைக் குறைக்கவும் “நேரில் வர வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மனுவை பதிவிறக்கம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கூடுதல் வசதியாக, கட்சியினர் எங்கிருந்தும் எளிதாகப் பதிவிறக்கம் செய்யும் வகையில் QR Code முறையை என்.ஆனந்த் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விருப்ப மனுவை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலான இந்த முன்னெடுப்பு, விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்குவதோடு, பனையூர் தலைமை அலுவலகத்திற்குத் தொண்டர்கள் நேரடியாக வருவதைக் குறைத்து நெரிசலற்ற சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
