தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் மூத்த தலைவரும் வடசென்னை முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வி.எஸ். பாபு, இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சென்னையில் உள்ள கட்சித் தலைவர் விஜய்யின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த வி.எஸ். பாபு, தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக களம் கண்டு வரும் நிலையில், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களின் வருகை அக்கட்சிக்கு வலுசேர்க்கும் விதமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தவெக-வை நோக்கி நகர்ந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது வி.எஸ். பாபுவும் இணைந்துள்ளது அதிமுக கூடாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களையும் மூத்த நிர்வாகிகளையும் தவெக ஈர்த்து வருவது விஜய்யின் அரசியல் நகர்வுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது
