தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்து தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடலூரில் இன்று (பிப். 07) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் கட்சி தொடங்கி “விதை விதைத்து அது முளைப்பதற்குள்ளேயே” விஜய் மீது ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாகச் சாடினார். ஊழலுக்கு எதிராகப் பேசும் விஜய், தனது வருமானம் மற்றும் வாங்கும் சம்பளம் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அமைச்சர், வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு விஜய்க்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார். 2015-16 நிதியாண்டில் வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கும், அவர் முன்வைக்கும் ஊழல் எதிர்ப்பு முழக்கங்களுக்கும் இது பெரும் பின்னடைவு என்றும் திமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
