தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், திமுக கூட்டணி அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், “தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது” என்று சூசகமாகக் கூறியதுடன், “எந்த ஓபிஎஸ்?” என்று செய்தியாளர்களிடமே பதில் கேள்வி கேட்டு மர்மத்தை நீடித்தார்.
தற்போது தமிழக அரசியலில் திமுக-காங்கிரஸ், அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், ஓபிஎஸ் தரப்பு இன்னும் தனது கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. குறிப்பாக, திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் ஓபிஎஸ்-ஸை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்துப் பேசியதாகக் கூறப்படும் தகவல், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கட்சி தொடங்கி திமுகவுடன் கைகோர்ப்பது அல்லது நேரடியாக ஆதரவளிப்பது போன்ற ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
முக்குலத்தோர் சமூகத்தில் ஓபிஎஸ்-ஸிற்கு இருக்கும் கணிசமான செல்வாக்கு, தென் மாவட்டங்களில் திமுகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று அக்கட்சி தலைமை நம்புகிறது. பல முனைப் போட்டிகள் நிலவும் இந்தத் தேர்தலில், சிறிய அளவிலான வாக்கு வங்கிக் கூட வெற்றியின் திசையை மாற்றக்கூடும் என்பதால், திமுக ஓபிஎஸ் தொடர்பான கதவுகளை முழுமையாக மூடவில்லை. ஒருவேளை ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைந்தால், அது தென் தமிழகத்தில் அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், ஓபிஎஸ் விஜய்யின் தவெக கூட்டணியில் இணைந்தால், அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும். அதிமுக வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதால், இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சவாலாக அமையலாம். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு தமிழகத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
