பீகார் மாநிலம் முசாபர்பூரில், வேலையின்மை மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரைச் சமயோசிதமாகக் காப்பாற்றியுள்ளனர். சிக்கந்தர்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்ததால் தனது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்துள்ளார். இதனால் வீட்டில் தினசரி சண்டைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவரது மனைவி அவரைத் தொடர்ந்து கேலி செய்தும், சரியாக உணவு வழங்காமலும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர், முசாபர்பூர் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற உள்ளூர் மக்கள், நிலைமையைப் புரிந்து கொண்டு ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அவரைத் தண்டவாளத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துக் காப்பாற்றினர். மீட்கப்பட்ட பின் அந்த இளைஞர் தனது வேதனைகளை அழுதபடி மக்களிடம் பகிர்ந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
