நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை நடத்தவிடாமல் தடுத்தது, நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் ஒரு ஏழைப் பழங்குடியினப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமரியாதை என்று அவர் சாடினார். சாமானிய மக்களை அவமதிப்பது காங்கிரஸின் கலாசாரத்திலேயே ஊறிப்போயுள்ளது என்றும் அவர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் எடுத்த நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், தனக்கு ‘சவக்குழி’ தோண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். நாட்டு மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப்போவதில்லை என்று அவர் தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
