தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்பிரபல ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில் பல அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் அணுகுமுறையானது அதிமுகவின் வாக்கு வங்கியை மையமாகக் கொண்டது என்றும், அவர் திமுகவை மட்டும் பிரதான எதிரியாகக் காட்டி அரசியல் செய்வது ஒரு தற்காலிக எழுச்சியை மட்டுமே தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் தற்போதைய செயல்பாடுகளை சந்திரமுகி திரைப்படத்தில் வரும் கங்கா கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுள்ள கோட்டீஸ்வரன், விஜய் அதிமுகவின் பிம்பத்திற்குள் புகுந்து “கூடு விட்டு கூடு பாயும்” வித்தையைச் செய்கிறார் என்று சாடியுள்ளார். ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பெயர்களைப் பயன்படுத்தி அதிமுகவின் ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதால், அக்கட்சியை நேரடியாக விமர்சிக்காமல் அவர் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகத் தெரிகிறது. இது அவர் ஓபிஎஸ்ஸுன் ‘ஸ்லீப்பர் செல்’லாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறியுள்ளார்.
மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது, விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வராமல் “ஒர்க் ஃபரம் ஹோம்” பாணியிலேயே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனமும் எழுப்பப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் நேரில் செல்லாமல், கள யதார்த்தத்தை உணராமல் வெறும் சினிமா பிம்பத்தை மட்டுமே நம்பி அவர் செயல்படுவது ஒரு முழுநேர அரசியல்வாதிக்கு அழகல்ல என்று கோட்டீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் போன்ற அடிப்படை நிர்வாக விஷயங்களில் விஜய்க்கு போதிய புரிதல் இல்லை என்பது அவரது வாதம்.
மேலும், பாஜகவின் வரிச்சுமை அல்லது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல் விஜய் தவிர்ப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. தனது கட்சியில் புதிதாகச் சேரும் நபர்களின் பின்னணி மற்றும் அவர்கள் மீதான ஊழல் புகார்களைக் கவனிக்கத் தவறும் விஜய், மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சிப்பது முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெறும் சினிமா வசனங்கள் தொண்டர்களுக்கு உற்சாகம் தருமே தவிர, நீண்ட கால அடிப்படையில் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே இந்த நேர்காணலின் சாராம்சமாக உள்ளது.
