கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த வக்கிரமான செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
வைஷாகன் தனது திருமணத் தகவலை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், அவரைத் தீர்த்துக்கட்ட வைஷாகன் ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று தனது பட்டறைக்கு அந்தப் பெண்ணை அழைத்த அவர், “நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம்” என்று கூறி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
வைஷாகனின் தற்கொலை முயற்சியைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்ணை, அவர் ஆத்திரத்துடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பெண் உயிரிழந்ததை உறுதி செய்த வைஷாகன், பின்னர் அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டு தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கொலையை தற்கொலை போலச் சித்தரிப்பதற்காக, பெண்ணின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, தனது மனைவிக்கே போன் செய்து பட்டறையில் யாரோ தற்கொலை செய்திருப்பதாகத் தகவல் கொடுத்துள்ளார்.
இருப்பினும், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணை மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வைஷாகனின் சதித்திட்டம் அம்பலமானது. பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் சடலத்துடன் உடலுறவு எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
