தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் இந்த விருப்பமனுக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வரும் தவெக-வின் இந்த அறிவிப்பு, அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு நல்லாட்சியை வழங்குவதே தவெக-வின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் மட்டுமே மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை வலியுறுத்தியுள்ள தலைமை, வரும் தேர்தலை ஒரு பெரும் அரசியல் புரட்சியாகவும் எழுச்சியுடனும் சந்திக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது.
விருப்பமனு விநியோகம் பிப்ரவரி 6-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது. அதன் பிறகு மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். விருப்பமுள்ள கழகத் தோழர்கள் தங்களின் விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் விஜய்யின் ஆணைக்கிணங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் ‘வெற்றித் தலைவரின்’ ஆசி பெற்ற வேட்பாளர்களாகக் களம் இறங்கத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான முதல் கட்டப் பணியாக இது பார்க்கப்படுகிறது.
முதன்முறையாகத் தேர்தல் களத்தைக் காணவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம், மற்ற திராவிடக் கட்சிகளுக்கு இணையாகத் தனது தேர்தல் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, விருப்பமனு தாக்கல் எனத் தேர்தல் நடைமுறைகளை முறைப்படி அறிவித்துள்ளதன் மூலம், தவெக ஒரு வலிமையான அரசியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்வது தெளிவாகிறது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம்
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின்…
— TVK Party HQ (@TVKPartyHQ) February 3, 2026
