2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், மற்ற கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, பெண்களிடையே தனக்குள்ள நற்பெயரையும் ஆதரவையும் வாக்குகளாக மாற்றும் நோக்கில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 50 பேரை பெண் வேட்பாளர்களாகக் களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் தலா 3 தகுதியான நபர்கள் கொண்ட பட்டியலைத் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் கல்வித் தகுதி, அரசியல் பின்னணி, அந்தந்தப் பகுதிகளில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் சமூக நலப் பணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இறுதி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் சூழல் நிலவுவதால், வேட்பாளர் தேர்வில் மிகக் கடுமையான விதிமுறைகளை விஜய் பின்பற்றி வருகிறார். குறிப்பாக, ஊழல் கறை படியாத, மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்ட புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரத்தை ஆராயத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் ரகசிய அறிக்கையின் அடிப்படையிலேயே வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், தமிழ்நாட்டின் சரிபாதி வாக்காளர்களாக இருக்கும் பெண் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என விஜய் நம்புகிறார். 50 பெண் வேட்பாளர்கள் என்ற அறிவிப்பு உண்மையாகும்பட்சத்தில், அது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இளைஞர்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தி விஜய் வகுத்துள்ள இந்த ‘மாஸ்டர் பிளான்’ எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
