தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் பிளவு மற்றும் கூட்டணி குறித்த நகர்வுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஜிகே மணி, தற்போது நிலவும் அரசியல் சூழலில் ராமதாஸ் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவதாகவும், கூட்டணி குறித்த இறுதி முடிவை அவரே எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இரு தரப்பும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. அன்புமணி தரப்பு ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தலைமையிலான அணி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் இணைய முயற்சி செய்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு மற்றும் தலித் மக்களின் வாக்கு வங்கி சிதறிவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதால், ராமதாஸ் தரப்பிற்கு அங்கு சவாலான சூழலே நிலவுகிறது.
தற்போதைய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதா அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பதா என்பது குறித்து ராமதாஸ் தரப்பு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. தைலாபுரத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் ராமதாஸ் நேரடியாக நேர்காணல் நடத்தி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்து இருப்பதாக ஜிகே மணி குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அமைச்சர் எ.வ. வேலுவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவரும் செய்திகள் வெறும் கற்பனையே என்று அவர் மறுத்துள்ளார்.
கட்சியின் பிளவுக்குத் தான் ஒருபோதும் காரணமாக இருக்கவில்லை என்றும், தந்தை – மகனை இணைக்க கடந்த ஐந்து மாதங்களாகப் போராடியதாகவும் ஜிகே மணி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “கனத்த இதயத்துடனேயே நாங்கள் தற்போது செயல்பட்டு வருகிறோம்” என்று குறிப்பிட்ட அவர், ராமதாஸின் 21 ஆண்டுகால நிழல் நிதிநிலை அறிக்கை போன்ற மக்கள் நலத் திட்டங்களே பாமகவின் வலிமைக்குச் சான்று என்றார். இன்னும் சில தினங்களில் ராமதாஸ் எடுக்கப்போகும் இறுதி முடிவு, வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
