இன்றைய வேகமான உலகில் மன அழுத்தம் என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. இருப்பினும், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் (IPS) 77-வது தேசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, கவலைக்குரிய பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மன அழுத்தத்தால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், 60 சதவீத மனநலப் பிரச்சினைகள் 35 வயதுக்குட்பட்டவர்களிடமே தொடங்குகின்றன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, மனநலப் பாதிப்புகள் என்பது வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படுபவை அல்ல; மாறாக 34.6 சதவீதப் பிரச்சினைகள் 14 வயதுக்கு முன்பே தொடங்கிவிடுகின்றன. 18 வயதுக்குள் சுமார் 48.4 சதவீதத்தினரும், 25 வயதுக்குள் 62.5 சதவீதத்தினரும் மன அழுத்தத்தின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் (2011-2021), 18 முதல் 25 வயதுடையவர்களிடையே மன உளைச்சல் 101.7 சதவீதம் அதிகரித்துள்ளது ஒரு பெரும் பொதுச் சுகாதார அவசரநிலையாகப் பார்க்கப்படுகிறது.
இளைஞர்களிடையே இத்தகைய பாதிப்புகள் அதிகரிக்க கல்விச் சூழலில் நிலவும் கடும் போட்டி, வேலையின்மை குறித்த பயம், சமூகத் தனிமை மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் (செல்போன்) அதீதப் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. போதைப்பொருள் பழக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களைச் சரியாகக் கையாளத் தெரியாத நிலையும் இளைஞர்களை மனச்சோர்வுக்குத் தள்ளுகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களின் தற்கொலைக்கு மனநலப் பிரச்சினைகளே மூன்றாவது முக்கிய காரணியாக உள்ளது.
மன அழுத்தத்தைக் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது நாள்பட்ட நோயாக மாறி ஒருவரது கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உறவுகளில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளையும், ஆண்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் இது பரிசாக அளிக்கிறது. எனவே, இளைய தலைமுறையினரின் மன நலனில் பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுக்குத் தேவையான மனோதத்துவ ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
