“தலைக்கு 1 கோடி, 234 தொகுதிகளும் தனி ரூட்”… பனையூரில் நடந்த ரகசிய மீட்டிங்… திமுக, அதிமுக-வை கதறவிடும் தளபதியின் மெகா பட்ஜெட் அரசியல்…..!

By Nanthini on தை 30, 2026

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அவர்கள் வழங்க வேண்டிய டெபாசிட் தொகை குறித்த செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் இருந்து வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் களத்தில் வலுவான போட்டியைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ள விஜய், ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான வேட்பாளர்களைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, மாவட்டச் செயலாளர்கள் மூலமாகத் தயார் செய்யப்பட்ட உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளவர்களிடம், தலா ஒரு கோடி ரூபாயை டெபாசிட் தொகையாக வழங்க வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையானது தேர்தலுக்கான தயார் நிலை மற்றும் வேட்பாளர்களின் பொருளாதார பலத்தை உறுதி செய்யக் கோரப்படுவதாகத் தெரிகிறது.

   

இந்த திடீர் நிபந்தனையால் தவெக நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியவர்கள் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் முன்வந்த பலர், இப்போது ஒரு கோடி ரூபாய் என்ற பெரிய தொகையைக் கேட்டுப் பின்வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தவெக தனித்துப் போட்டியிடுமா அல்லது கடைசி நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா என்ற குழப்பமும் நிர்வாகிகளிடையே நிலவுகிறது. கூட்டணியில் இணைந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உறுதி என நினைக்கும் சிலர், இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய யோசித்து வருகின்றனர்.

   

மறுபுறம், வேட்பாளர் தேர்வை வெளிப்படையாகவும் நவீனமாகவும் மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆன்லைன் மூலம் விருப்ப மனுக்களைப் பெறும் முறையை அமல்படுத்த அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ள முடியாத தகுதியான இளைஞர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது. எனினும், வேட்பாளர் தேர்வு மற்றும் பண விவகாரங்களில் எழுந்துள்ள இந்தத் தகவல்கள் தவெக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.