தேமுதிகவின் கூட்டணி குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகப் பலமான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. அதிமுகவிடம் தேமுதிக கேட்ட 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கோரிக்கைக்கு உடன்பாடு எட்டப்படாததால், தற்போது அக்கட்சி திமுக பக்கம் நகரத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தரப்பில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்க ரகசியமாக இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக ஏற்கனவே மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியுள்ள நிலையில், தேமுதிகவையும் இதே போன்றதொரு பார்முலாவில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் சென்னை திரும்பியதும், பிப்ரவரி முதல் வாரத்தில் கூட்டணி குறித்த இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
