தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அவரைச் சுற்றியுள்ள ஒரு ‘நிழல் ஆலோசகர்’ பற்றிய செய்திகள் அக்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் மிக நெருக்கமான வட்டத்தில் இருக்கும் ஒரு ஜோதிடர், கட்சியின் முக்கியமான அரசியல் முடிவுகள், மாநாடுகளின் நேரம் மற்றும் இடங்கள் என அனைத்தையும் திரைமறைவில் இருந்து இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானபோது, அவருடன் இந்த ஜோதிடரும் சென்றிருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
டெல்லி மேலிடத்தில் தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கூறி விஜய்யின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்த ஜோதிடர், உண்மையில் சர்ச்சைக்குரிய பின்னணி கொண்டவர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே, ஆன்மீகம் மற்றும் அரசியல் செல்வாக்கைக் காட்டி அவரிடமே தனது கைவரிசையைக் காட்ட முயன்று, பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர் தான் இந்த நபர் என்று மூத்த அரசியல் பிரமுகர்கள் எச்சரிக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நபர் விஜய்யைச் சுற்றி வலம் வருவது தவெக நிர்வாகிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகக் கூறும் விஜய், ஒரு ‘ஏமாற்றுக்காரர்’ என்று குற்றம் சாட்டப்படும் நபரின் பேச்சைக்கேட்டு முடிவெடுப்பது சரியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. “டெல்லி தொடர்புகள்” என்ற பெயரில் தன்னை ஒரு வலையில் இந்த ஜோதிடர் சிக்க வைத்துவிட்டாரோ என்று விஜய்க்கு நெருக்கமானவர்களே இப்போது அஞ்சத் தொடங்கியுள்ளனர். ஜோதிடர் சொல்லும் நேரத்திற்காகக் காத்திருந்து பல முக்கிய நிகழ்ச்சிகளை விஜய் தவிர்த்ததும் தற்போதைய அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது.
2026 தேர்தல் நெருங்கும் சூழலில், தனது அரசியல் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவுகளை இதுபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய நபரிடம் ஒப்படைத்தது விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைச் சந்தேகிக்க வைக்கிறது. இந்தத் தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து விஜய் தற்போது மிகுந்த அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது ‘உள் வட்டத்தில்’ புகுந்துள்ள இந்த நிழல் ஆலோசகரை அப்புறப்படுத்திவிட்டு விஜய் தனது பாதையைச் சீரமைப்பாரா அல்லது இதுவே அவருக்குப் பெரிய அரசியல் சிக்கலாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
