அணுசக்தி கப்பல் முதல் ஏவுகணைகள் வரை…! ஈரானை நோக்கி பாயத் தயாராகும் அமெரிக்கா…? நீடிக்கும் பதற்றமான சூழல்…!!

By Devi Ramu on தை 27, 2026

Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் மோதல் போக்கு, தற்போது போர் மேகங்களாக உருவெடுத்துள்ளன. ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டின் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதாக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிநவீன அணுசக்தி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ மூன்று ஏவுகணை அழிப்புக் கப்பல்களுடன் வளைகுடா கடற்பகுதிக்குள் நுழைந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்தக் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறினாலும், இது ஈரான் மீதான ராணுவ அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி நகர்வால், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் அண்டை நாடுகளிடையே பரவி வருகிறது.