நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் தணிக்கை விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுச் சிக்கல்கள் ஒருபுறம் தீவிரமடைந்து வந்தாலும், தனது அரசியல் இலக்கான 2026 தேர்தலை நோக்கிய பயணத்தில் அவர் பின்வாங்கவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசாரம் நாளை முதல் முறைப்படி தொடங்குகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய், திரைத்துறை நெருக்கடிகளைக் கடந்து மக்கள் பணியே பிரதானம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வைத் துரிதப்படுத்தியுள்ளார்.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் இந்தப் பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் மற்றும் சமீபத்தில் விஜய்யின் முன்னிலையில் கட்சியில் இணைந்த மூத்த அரசியல் தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற செங்கோட்டையன், தவெக-வின் பிரசாரக் களத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தின் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விஜய் மீண்டும் உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
