“3-3-1 ஃபார்முலா”…. ஒரு கணவன், இரண்டு மனைவிகள்… வினோத பஞ்சாயத்து தீர்ப்பால் ஸ்தம்பித்த கிராமம்….!

By Nanthini on தை 27, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம், நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், மற்றொன்று காதல் திருமணமாகும். இந்நிலையில், கணவர் தன்னிடம் தான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று கூறி இரண்டு மனைவிகளுக்கிடையே அடிக்கடி கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சினை முற்றிய நிலையில், அசிம் நகர் காவல் நிலையத்திற்குப் புகார் சென்றது. காவல்துறை இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து கூட்டப்பட்ட கிராமப் பஞ்சாயத்தில், கணவரை இரு மனைவிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு வினோதமான கால அட்டவணை  தயாரிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின்படி, வாரத்தின் முதல் மூன்று நாட்களான திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் கணவர் தனது முதல் மனைவியுடன் தங்க வேண்டும். அடுத்த மூன்று நாட்களான வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இரண்டாவது மனைவியுடன் வசிக்க வேண்டும். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும், கணவர் தனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

   

பஞ்சாயத்தின் இந்த வினோத முடிவை கணவர் மற்றும் அவரது இரண்டு மனைவிகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் நீண்ட நாட்களாகத் தொடர்ந்த குடும்பச் சண்டைக்கு ஒரு வித்தியாசமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போதையச் சூழலில் ஒரு கணவரை வார நாட்களின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் இந்தச் சமரச உடன்படிக்கை, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.