ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் வானில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதித்தது போன்ற அபூர்வக் காட்சி தென்பட்டது உலகெங்கும் உள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இடது மற்றும் வலது புறம் என இருபுறமும் பிரகாசமான ஒளிவட்டங்களுடன் காட்சியளித்த இந்த நிகழ்வு, உண்மையில் சூரியன் இரண்டாகப் பிளவுபட்டது அல்ல; இது ‘சண்டாக்’ அல்லது ‘பார்ஹீலியா’ என்று அழைக்கப்படும் ஒரு வளிமண்டல ஒளிச் சிதறல் விளைவாகும். வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள அறுகோண வடிவப் பனிக்கட்டிகள் வழியாகச் சூரிய ஒளி ஊடுருவும்போது ஏற்படும் இந்த மாயத்தோற்றம், போலி சூரியன்கள் வானில் உதித்தது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறது.
குளிர்ச்சியான காலநிலையில், குறிப்பாக மைனஸ் 30 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் காற்றில் மிதக்கும் பனிப்படிகங்கள் மீது ஒளி பட்டுத் தெறிப்பதாலேயே இத்தகைய ஒளிவட்டங்கள் தோன்றுகின்றன. பழங்காலத்தில் மக்கள் இதனை வானுலகக் கடவுளான ஜீயஸ் தனது நாய்களுடன் வானில் உலா வருவதாக நம்பியதால், இதற்கு ‘சூரிய நாய்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. பொதுவாகச் சூரியன் அடிவானத்திற்கு அருகில் இருக்கும் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே இந்த அரிய அறிவியல் நிகழ்வைத் தெளிவாகக் காண முடியும். இயற்கையின் இந்த விசித்திரமான ஒளியியல் மாற்றம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
