தேர்தல் நிதிக்கு திமுகவின் ‘விஞ்ஞான ஊழல்’…! ரூ.2000 கோடி சாலை டெண்டர் பற்றி பகீர் கிளப்பிய அன்புமணி….!

By Devi Ramu on தை 26, 2026

Spread the love

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் அடுத்த நிதியாண்டில் (2026-27) மேற்கொள்ளப்பட வேண்டிய ரூ.2,000 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு, இப்போதே அவசர அவசரமாக அரசாணை வெளியிட்டு டெண்டர் கோருவது ஊழலுக்கான வழிவகை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்குகளை விலைக்கு வாங்க நிதி திரட்டும் நோக்கிலேயே இத்தகைய ‘விஞ்ஞான ஊழல்’ அரங்கேற்றப்படுவதாக அவர் சாடியுள்ளார். தற்போதைய ஆட்சியின் நிதி நிலைமையிலேயே பல திட்டங்கள் முடங்கிக் கிடக்கும் போது, வருங்கால நிதியை முன்கூட்டியே சுரண்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

   

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களுக்குப் பணிகளை வழங்கி, அதன் மூலம் ஆதாயம் அடையவே திமுக அரசு முற்படுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

   

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே இந்தப் பணிகளை முடிக்கத் துடிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இந்தச் சிறப்பு நிர்வாக அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை இந்த டெண்டர் நடைமுறைகள் தொடர்ந்தால், தேர்தலுக்குப் பின் அமையப்போகும் புதிய ஆட்சியில் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.