தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவை “ஊழல் சக்தி” என்று விமர்சித்ததைத் தொடர்ந்து, விஜய்க்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஊழல் என்பது சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிப்பது என்றால், தனது திரைப்படங்களுக்குத் தொடர்ந்து பிளாக்கில் டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்த விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுபவர் கொள்கை பற்றிப் பேசக்கூடாது .
கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரில் சென்று ஆறுதல் கூறாமல் தனது பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்துவது ஆபத்தான “தற்பெருமை அரசியல்” என்று அதிமுக விமர்சித்துள்ளது. ஊழலுக்கு எதிரானவர் என்று தன்னைக்காட்டிக் கொள்ளும் விஜய், அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தனது மேடையிலேயே அமர வைத்திருப்பது எத்தகைய தூய அரசியல் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
