மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மங்கர்ணா என்ற பெண்மணியை, புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் தாக்கியது. அந்தச் சிறுத்தை அப்பெண்ணின் கழுத்தைப் பதம் பார்க்க முயன்றபோது, அன்று நிலவிய கடும் குளிருக்காக அவர் கழுத்தில் சுற்றியிருந்த தடிமனான சால்வை பெரும் கேடயமாக மாறியது. சிறுத்தையின் கூர்மையான பற்கள் பெண்ணின் சதையைத் துளைக்க முடியாமல் அந்தத் துணியிலேயே சிக்கிக் கொண்டதால், அவர் இமைக்கும் நேரத்தில் மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.
மங்கர்ணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மிரண்டு போன சிறுத்தை புதருக்குள் ஓடி மறைந்தது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் கேமராக்களை பொருத்தி சிறுத்தையைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு சாதாரண துணி ஒருவரது உயிரைக் காக்கும் கவசமாக மாறியுள்ள இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
