அஞ்சல் அலுவலகம் வழங்கும் ‘மாத வருமானத் திட்டம்’, ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பிலிருந்து மாதந்தோறும் நிலையான வருமானம் பெற உதவும் ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் தனிநபர் பெயரில் 9 லட்சம் ரூபாய் வரையிலும், மூன்று பேர் வரை இணைந்து தொடங்கும் கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையிலும் வைப்பு செய்யலாம். ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படும் இத்திட்டத்தில், முதலீடு செய்த மறுமாதத்திலிருந்தே வட்டித் தொகையை ‘மாதச் சம்பளம்’ போல உங்கள் சேமிப்புக் கணக்கில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தை, 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொடங்க முடியும். ஒரு வருடம் முடிவதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது என்றாலும், அவசரத் தேவைக்கு குறிப்பிட்ட அபராதத் தொகையுடன் இடையில் கணக்கை முடிக்கும் வசதி உள்ளது. மத்திய அரசின் நேரடி உத்தரவாதத்துடன் கூடிய இத்திட்டத்தில், முதலீடு செய்த அசல் தொகைக்கு முழு பாதுகாப்பு கிடைப்பதுடன், சந்தை ஏற்ற இறக்கங்களால் வட்டி வருமானம் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
