காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் ‘மாம்பழம்’ சின்னம் இந்தப் பேனரில் இடம்பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவிற்கு மாம்பழச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ பேனரிலேயே அச்சின்னம் அச்சிடப்பட்டுள்ளது பாமக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், இந்தக் கூட்டணிப் பேனரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், இவர்களது படங்கள் தவிர்க்கப்பட்டிருப்பது அவர்கள் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இல்லை என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோரின் படங்கள் இல்லாதது மதுராந்தகம் பொதுக்கூட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.
