பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குன்னம் ராமச்சந்திரன், தான் அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகுவதாகத் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக அவர் திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் திமுகவில் இணையப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கமளித்துள்ளார். ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இவரது இந்தத் திடீர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து குன்னம் ராமச்சந்திரனும் திமுகவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
