நாக்பூர் டி20: அக்சர் படேலின் விரலில் இருந்து வழிந்த ரத்தம்… மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு..!!

By Soundarya on தை 22, 2026

Spread the love
நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்தது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து இன்னிங்ஸின் 16-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். அப்போது டேரில் மிட்செல் அடித்த சக்திவாய்ந்த ஷாட்டைத் தனது இடது கையால் அக்சர் தடுக்க முயன்றார். பந்து பலமாக மோதியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. வலியால் துடித்த அவர், ஓவரை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த ஓவரின் மீதமுள்ள 3 பந்துகளை அபிஷேக் சர்மா வீசி முடித்தார்.
காயமடைவதற்கு முன்னதாக, அக்சர் படேல் 3.3 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து, அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். முன்னதாக பேட்டிங்கில் இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி 84 ரன்கள் மற்றும் ரிங்கு சிங்கின் 44 ரன்கள் உதவியுடன் 238 ரன்கள் குவித்தது. இறுதியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.